
அரசின் ஆட்சேபனை நிராகரிப்பு.. ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய கொல்கத்தா ஐகோர்ட்டு

கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் பர்த்வான் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்துள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதால், பொதுக்கூட்டத்தில் பயன்படுத்தப்படும் ஸ்பீக்கர்களால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் எந்த பள்ளியும் இல்லை என்றும், அதனால் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதற்கு மேற்கு வங்காள அரசு தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அரசாங்க தரப்பு ஆட்சேபங்களை நிராகரித்ததுடன், ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்ஜ. பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் எந்த தேர்வும் இல்லை என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.