
கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி-சி.பி.எஸ்.இ. பரிசீலனை

கால்குலேட்டர்களை அனுமதிப்பது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து தேர்வு செயல்திறனை மேம்படுத்த உதவும் என்றும் பாடத்திட்டக் குழு வாதிட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நீண்ட கணக்கீடுகளுடன் தொடர்புடைய கணக்கு பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வில், மாணவர்களின் சுமையைக் குறைக்க, கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதிக்க ஆராய்ந்து வருவதாக கூறி உள்ளது. அடிப்படை நிரல்படுத்த முடியாத கணித தேர்வுகளுக்கு கால்குலேட்டர்களைப் பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.இ.சி) 2021-ல் 12-ம் வகுப்பு மாணவர்கள் கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதித்தது. அதேபோல சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று கல்வி வாரியத்தின் பாடத்திட்டக் குழு முன்மொழிந்து உள்ளது. கால்குலேட்டர்களை அனுமதிப்பது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து தேர்வு செயல்திறனை மேம்படுத்த உதவும் என்றும் பாடத்திட்டக் குழு வாதிட்டுள்ளது.
இதேபோல சிறிய அளவிலான பாடங்களுக்கு ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (ஓ.எஸ்.எம்) முறையை முன்னோட்டமாக்குதல் மற்றும் வாரியத் தேர்வுகளில் புதிய மறுமதிப்பீட்டு செயல்முறையை செயல்படுத்துதல் ஆகியவையும் சி.பி.எஸ்.இ. பரிசீலித்து வருகிறது.
இதன்படி விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு அனுப்பாமல் ஸ்கேன் செய்து அனுப்பி. டிஜிட்டல் முறையில் திருத்தம் செய்யப்படும். இந்த மாற்றங்களை வரும் கல்வியாண்டில், அறிவியல், கணித தேர்வில் பரிசோதித்து பார்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.