6 மாநிலங்களில் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு: உத்தரகாண்ட், மேற்கு வங்காளத்தில் வன்முறை
|இடைத்தேர்தலில் பெரும்பாலும் அமைதியான வாக்குப்பதிவு நடந்தாலும், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரகாண்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
புதுடெல்லி,
தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவின் காரணமாக நேற்று அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இதைப்போல மேலும் 6 மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் காலியாக இருந்த 12 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கடந்த ஆண்டு ஆம் ஆத்மியில் இணைந்ததால் காலியான இந்த தொகுதிக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கு பல வாக்குச்சாவடிகளில் ஓட்டுபோட்ட வாக்காளர்களுக்கு மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டது. நேற்றைய இடைத்தேர்தலில் பெரும்பாலும் அமைதியான வாக்குப்பதிவு நடந்தாலும், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரகாண்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
குறிப்பாக உத்தரகாண்டின் மங்க்ளார் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயம் அடைந்தனர். சில வாக்குச்சாவடிகளில் மர்ம நபர்கள் புகுந்து மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதைப்போல மேற்கு வங்காளத்தின் ரனாகாட் தக்சின், பாக்தா தொகுதிகளில் தங்கள் வாக்குச்சாவடி முகவர்களை திரிணாமுல் காங்கிரசார் தாக்கியதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.