இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவின் தந்திரம் தகர்க்கப்பட்டது - ராகுல் காந்தி
|இந்தியா கூட்டணியை மக்கள் ஆதரித்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்னியூர் சிவா, 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதே நேரத்தில், நாட்டின் பிற பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இடைத்தேர்தல் வெற்றி குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"மக்களிடம் குழப்பம், அச்சத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும் தந்திரம், 7 மாநில இடைத்தேர்தல் வெற்றி மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. சர்வாதிகாரத்தை ஒழித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.
மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மேம்படவும், அரசியலமைப்பைக் காக்கவும் இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். சர்வாதிகாரத்தை ஒழிக்க விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், மாத ஊதியம் பெறுவோர் வாக்களித்துள்ளனர்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.