பாலத்தில் சென்றபோது பயங்கரம்.. ஓடையில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 8 பேர் பலி
|பேருந்து அதிவேகத்தில் சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் விழுந்திருக்கலாம் என பதிண்டா துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
பதிண்டா:
பஞ்சாப் மாநிலம் தல்வாண்டியில் இருந்து பதிண்டா நோக்கி இன்று பயணிகளை ஏற்றி வந்த பேருந்து, பாலத்தில் இருந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த மழை பெய்துகொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று பேருந்திற்குள் சிக்கியவர்களை மீட்கத் தொடங்கினர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பாலத்தில் தடுப்பு சுவரோ, தடுப்பு கட்டைகள் இல்லை. தடுப்பு கட்டைகள் இருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். பேருந்து சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதற்கு கனமழை காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பேருந்து அதிவேகத்தில் சென்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரசு உதவிகள் வழங்கப்படும் என்றும் பதிண்டா துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்