"புல்டோசர் நீதியை ஏற்றுக்கொள்ள முடியாது" - தலைமை நீதிபதியாக சந்திரசூட் வழங்கிய இறுதி தீர்ப்பு
|புல்டோசர் நீதி என்பதை சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாது என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த 2022-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதியால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக இவர் பதவியேற்றார். இவரது பணிக்காலம் 10-ந்தேதியுடன்(இன்று) முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நிதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சிவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் வரும் 11-ந்தேதி(நாளை) பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதியாக சந்திரசூட் வழங்கிய இறுதி தீர்ப்பில், புல்டோசர் நீதியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மனோஜ் திப்ரேவால் ஆகாஷ் என்பவரது பூர்வீக வீடு கடந்த 2019-ம் ஆண்டு உரிய முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது இதனை அவர் குறிப்பிட்டார்.
அவர் தனது உத்தரவில், "புல்டோசர் மூலம் நீதி என்பது எந்த நாகரீகமான நீதித்துறைக்கும் தெரியாது. சட்டத்திற்குப் புறம்பான நடத்தையை அனுமதித்தால், பழிவாங்கும் நடவடிக்கைக்காக குடிமக்களின் சொத்துக்கள் இடிக்கப்படும் ஆபத்து உள்ளது. மக்களின் குரலை அவர்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளை அழிக்கும் அச்சுறுத்தலால் ஒடுக்க முடியாது. ஒரு மனிதனுக்கு இருக்கும் இறுதிப் பாதுகாப்பு வீட்டுமனைதான்.
சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அல்லது சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டமைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன் அரசு உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். புல்டோசர் நீதி என்பதை சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாது. அது அனுமதிக்கப்படுமானால், 300ஏ பிரிவின் கீழ் சொத்துரிமைக்கான அரசியலமைப்பு அங்கீகாரம் என்பது ஒரு உயிரற்ற கடிதமாக மாறிவிடும். இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையை மேற்கொண்ட அல்லது அதற்கு அனுமதியளித்த மாநில அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.