மத்திய பட்ஜெட்: ரெயில்வே துறைக்கு ரூ.2.65 லட்சம் கோடி.. கடந்த ஆண்டை விட அதிகம்
|நேற்று தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2,65,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் ரெயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரெயில்வே பட்ஜெட்டையும் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து மத்திய அரசு தாக்கல் செய்து வருகிறது. அந்தவகையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2,65,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.2.40 லட்சம் கோடியை விட அதிகம் ஆகும்.
இது தொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், 'நடப்பு நிதியாண்டில் ரெயில்வேயின் மொத்த வருவாய் செலவினம் ரூ.2,78,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.2,65,200 கோடி மூலதனச் செலவும் அடங்கும்' என தெரிவித்தார்.
ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டு உள்ள ரூ.2,65,200 கோடியில் பொது வருவாய் ரூ.2.52 லட்சம் கோடியும், நிர்பயா நிதி ரூ.200 கோடியும், உள் வளங்கள் ரூ.3,000 கோடியும், இதர பட்ஜெட் வளங்கள் ரூ.10,000 கோடியும் அடங்கும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த ஒதுக்கீடு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இதில் ரூ.1.08 லட்சம் கோடி ரெயில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு செலவிடப்படும் என கூறியுள்ளார். குறிப்பாக, பழைய தண்டவாளங்களை மாற்றி புதிய தண்டவாளங்கள் பதித்தல், சிக்னல் அமைப்பு மேம்பாடு, மேம்பாலம் கட்டுதல், கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.