தேசிய செய்திகள்
டெல்லி சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி - மாயாவதி
தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி - மாயாவதி

தினத்தந்தி
|
8 Jan 2025 8:47 PM IST

பிற கட்சிகளின் கவர்ச்சியான வாக்குறுதிகளுக்கு வாக்காளர்கள் ஏமாற வேண்டாம் என்று மாயாவதி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 17-ந்தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதி ஆகும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. டெல்லியில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஆம் ஆத்மி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸுடன் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி எனவும் தெரிவித்தது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் கூட்டணி இல்லை, தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5, 2025 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தேர்தலில் முழு தயார் நிலையிலும், தனது சொந்த பலத்துடனும் போராடுகிறது. இந்தத் தேர்தலில் கட்சி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்கள் ஜனநாயகத்தின் முதுகெலும்பு, மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி என்ற வகையில், இந்த தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு, வகுப்புவாதம் மற்றும் அரசாங்க இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்துவது உட்பட பிற எதிர்மறை தாக்கங்களில் இருந்து விடுபடுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்புடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் மற்ற கட்சிகளின் கவர்ச்சியான வாக்குறுதிகளுக்கு திசைதிரும்ப வேண்டாம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு புத்திசாலித்தனமாக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்