'ஒரே நாடு ஒரே தேர்தல்' அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: மாயாவதி
|பாஜக அரசு கொண்டுவர உள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மாயாவதி கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாஜகவும் இடஒதுக்கீடுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் நிலுவையில் உள்ள அந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்வரவில்லை. ஏழைகள் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவான கட்சி என்ற அடிப்படையில், பாஜக அரசு கொண்டுவர உள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அரசின் செலவுகள் குறையும். இதனால் மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்த முடியும். எனவே, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.