< Back
தேசிய செய்திகள்
டெல்லி-சிகாகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது
தேசிய செய்திகள்

டெல்லி-சிகாகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது

தினத்தந்தி
|
16 Oct 2024 12:53 AM IST

ஏர் இந்தியா மற்றும் பிற உள்ளூர் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு சமீப நாட்களாக, எண்ணற்ற வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வருகின்றன என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட செய்தியில், டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி புறப்பட்ட ஏ.ஐ.127 என்ற விமானத்திற்கு ஆன்லைன் வழியே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்று விடப்பட்டது.

இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனடாவில் உள்ள இகுவாலூயிட் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளின்படி, மீண்டும் விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. பயணிகளின் பயணம் மீண்டும் தொடங்கும் வரை பயணிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்து உள்ளது.

சமீப நாட்களாக, ஏர் இந்தியா மற்றும் பிற உள்ளூர் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு எண்ணற்ற அச்சுறுத்தல்கள் வருகின்றன என்று குறிப்பிட்டு உள்ளது. இவை அனைத்தும் புரளிகள் என கண்டறியப்பட்டாலும், பொறுப்புள்ள விமான நிறுவனம் என்ற வகையில், அனைத்து அச்சுறுத்தல்களும் தீவிர கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால், பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியத்திற்கு வருந்துகிறோம்.

இதுபோன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நபர்களை கண்டறிவதில், அதிகாரிகளுடன் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பையில் இருந்து நியூயார்க் நகர் நோக்கி நேற்று புறப்பட்ட விமானம் ஒன்று இதேபோன்றதொரு வெடிகுண்டு அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில், விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது. இதுபோன்று தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடப்பட்டு வரும் சூழலில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் இன்று (புதன்கிழமை) உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்த முடிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்