திருப்பதியில் 3 தனியார் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர விசாரணை
|திருப்பதியில் 3 தனியார் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி,
திருப்பதியில் உள்ள 3 பிரபலமான தனியார் ஓட்டல்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதியில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்த நிலையில், மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் மோப்ப நாய்களுடன் சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டதாக ஓட்டல் நிர்வாகங்களின் சார்பில் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மின்னஞ்சல்களை அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.