< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை சிலை
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் கண்கள் கட்டப்படாத புதிய நீதி தேவதை சிலை

தினத்தந்தி
|
17 Oct 2024 8:02 AM IST

தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில், கண்கள் கட்டப்படாத நீதி தேவதை சிலை சுப்ரீம் கோர்ட்டு நூலகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும். இது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்த்து நீதி வழங்கிட கூடாது என்பதையும், சரியான எடை போட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதை உணர்த்தவும், அநீதியை வீழ்த்திட வாளும் நீதிதேவதையின் அடையாளமாக கருதப்படுகிறது.

அந்தவகையில், இந்த அடையாளத்தை மாற்றும் விதமாகவும் ‛சட்டத்தின் முன் சமத்துவம் ' என்பதை வலியுறுத்திட நேற்று சுப்ரீம் கோர்ட்டு நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். தற்போது, புதிய நீதி தேவதை சிலை வாள், கண்கட்டு அகற்றப்பட்டு, கையில் அரசியலமைப்பு புத்தகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, இப்புதிய நீதிதேவதை சிலை சொல்லும் செய்தி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் சட்டம் குருடு அல்ல ' என்பதையும் சட்டத்தின் முன் சமத்துவத்தை வலியுறுத்திட நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறிக்கிறது. எனவே சட்டம் ஒருபோதும் குருடாகாது, அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதை உணர்த்த கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, இடது கையில் வாளுக்கு பதிலாக நம் அரசியல் சாசன புத்தகம் நம் நாட்டின் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டங்களின்படி நீதி வழங்குகின்றன என்பதை வலியுறுத்துகிறது.

மூன்றாவதாக, நம்சமூகத்தில் சமநிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், இரு தரப்பு உண்மைகளும் வாதங்களும் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றங்களால் எடைபோடப்படுகின்றன என்ற கருத்தையும் வலியுறுத்தவே வலது கையில் நீதியின் தராசு உள்ளது.

மேலும் செய்திகள்