< Back
தேசிய செய்திகள்
அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: ஜே.பி.நட்டா வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: ஜே.பி.நட்டா வலியுறுத்தல்

தினத்தந்தி
|
19 Dec 2024 1:47 PM IST

அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று ஜே.பி.நட்டா வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நேற்று முன்தினம் நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் இரு அவைகளும் தொடங்கின. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதன் எதிரொலியாக 2-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில், அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக சாடியுள்ளது. இது குறித்து தேசிய தலைவரும், மத்திய மந்திரியுமான ஜே.பி.நட்டா கூறியதாவது:- அம்பேத்கரையும் அவரது மரபுகளையும் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. நேரு டாக்டர் அம்பேத்கரை வெறுத்தார். அதனால்தான் அம்பேத்கரை இரண்டு முறை தோற்கடித்தார் நேரு. அம்பேத்கருக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் அவருக்கு அனைத்தையும் செய்தது.

நடந்து முடிந்த நாடாளுமனற் தேர்தல், பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மோசமாக செயல்பட்டது. தற்போது முடிந்த மராட்டிய தேர்தலிலும் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவைப் பற்றி வெளிநாடுகளுக்கு சென்று பொய்களைப் பரப்புகின்றனர்.

நமது அரசியலமைப்பு உருவானதில் காங்கிரசுக்கு எந்த பங்கும் இல்லை. அம்பேத்கரை பற்றி காங்கிரஸ் கட்சி உண்மையில் என்ன நினைக்கிறது?. இப்போதாவது அம்பேத்கர் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்துங்கள். பொய்கள் எப்போதும் நிலைக்காது; உண்மை எப்போதும் வெல்லும். ஜெய் பீம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்