< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக கூட்டணி: ஜார்கண்டில் ஆட்சியை தக்கவைத்த காங்கிரஸ் கூட்டணி
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக கூட்டணி: ஜார்கண்டில் ஆட்சியை தக்கவைத்த காங்கிரஸ் கூட்டணி

தினத்தந்தி
|
24 Nov 2024 3:47 AM IST

மராட்டியத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.

மும்பை,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்றியது. இதன் மூலம் மராட்டியத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

அதேவேளை, இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 49 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. மற்றவை (சுயேச்சைகள் உள்பட) 6 தொகுதிகளை கைப்பற்றின.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் 14ம் தேதியும், எஞ்சிய 38 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் 20ம் தேதியும் நடைபெற்றது.

ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியில் போட்டியிட்டன. பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் களமிறங்கின.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில், 56 தொகுதிகளில் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

பாஜக தலைமையிலான கூட்டணி 24 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மற்றவை (சுயேச்சை) ஒரு தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

மேலும் செய்திகள்