< Back
தேசிய செய்திகள்
பீகார்: கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் பலி; பலர் மருத்துவமனையில் அனுமதி
தேசிய செய்திகள்

பீகார்: கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் பலி; பலர் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
16 Oct 2024 10:55 PM IST

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் பலியானதுடன், 15 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

சிவான்,

பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலர், உள்ளூரில் உள்ள கடை ஒன்றிற்கு சென்று, சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களில் சிலருக்கு பார்வை இழப்பு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதுபற்றிய போலீசாரின் விசாரணையில் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 15 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை சிவான் மாவட்ட மாஜிஸ்திரேட் முகுல் குமார் குப்தா இன்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, பகவான்பூர் காவல் நிலைய உயரதிகாரி மற்றும் பகவான்பூர் காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அவர்களில் 3 பேர் பாட்னா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதுபற்றி அறிவதற்காக குழு ஒன்று அந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மற்றொரு சம்பவத்தில், பீகாரின் சரண் மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததில் இருவர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் மதுபான விற்பனை மற்றும் உட்கொள்ளலுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. எனினும், அதன்பின்னர் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என சமீபத்தில் பீகார் அரசு தெரிவித்தது.

மேலும் செய்திகள்