< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு: தொழிலதிபரை மயக்கி ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை; நேபாள தம்பதி கைவரிசை
தேசிய செய்திகள்

பெங்களூரு: தொழிலதிபரை மயக்கி ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை; நேபாள தம்பதி கைவரிசை

தினத்தந்தி
|
14 Nov 2024 10:02 PM IST

நேபாள தம்பதி வீட்டில் இருந்த 1 கிலோ எடை கொண்ட நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, தப்பி சென்று விட்டது.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் சோனப்பா பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜு (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் மிதுன். இவர்களுடைய வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் அவருடைய மனைவி நிஷா இருவரும் வீட்டு பணியாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கோவிந்தராஜுக்கு இந்த தம்பதி காலை உணவை இன்று கொடுத்துள்ளது. குடிப்பதற்கு தேநீர் மற்றும் ஆம்லேட் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், அதில் மயக்க மருந்து கலக்கப்பட்டு இருந்தது. அது வேலை செய்ததும், இருவரும் மயக்கமடைந்து விழுந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த தம்பதி வீட்டில் இருந்த 1 கிலோ எடை கொண்ட நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, தப்பி சென்று விட்டது. இதுபற்றி பின்னர் தெரிய வந்ததும் கோவிந்தராஜுவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிந்தராஜுவும் அவருடைய மகன் மிதுனும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முதலில், உணவில் விஷம் கலக்கப்பட்டு இருக்க கூடும் என டாக்டர்கள் சந்தேகித்தனர். ஆனால், அவர்களின் நிலைமை மோசமடையவே, வேறொரு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த நேபாள தம்பதி வீட்டில் இருந்த ஸ்கூட்டர் ஒன்றையும், எடுத்து சென்றுள்ளது. இதன்பின்னர், அந்த ஸ்கூட்டர் பூங்கா ஒன்றின் அருகே தனியாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவர்கள் இருவரின் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது. அதனால், அவர்கள் இருவரையும் உடனடியாக கண்டறிய முடியவில்லை. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்