ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
|நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரின் நீதிமன்ற காவலை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்தவர் மருந்தக ஊழியர் ரேணுகாசாமி (வயது 33). இவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் பெங்களூருவில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அன்னபூர்ணேஸ்வரிநகர் போலீசார் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை கைது செய்துள்ளனர். இதில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 13 பேர் பரப்பன அக்ரஹாரா சிறையிலும், மீதமுள்ள 4 பேர் துமகூரு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடாவை குடும்பத்தினர் மற்றும் நடிகர்கள் சிலர் வந்து சந்தித்து செல்கின்றனர். சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் நடிகர் தர்ஷன் தன்னை ஜாமீனில் வெளியே எடுக்க பலரிடம் தொலைபேசியில் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது சிறையில் உள்ள கைதிகளுக்கு வாரத்தில் 3 முறை வெளியில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படும். சிறையில் உள்ள தொலைபேசி மூலம் பேசி கொள்ளலாம். மேலும் அழைப்பு விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படும். இதனால் கைதிகளின் நடவடிக்கைகள் போலீசாருக்கு தெரிந்துவிடும்.
தற்போது நடிகர் தர்ஷன், சிறைக்கு வெளியே உள்ள தயாரிப்பாளர்கள், நண்பர்கள் மற்றும் வக்கீல் உள்ளிட்டோருடன் பேசி வருவதாகவும், தன்னை எப்படியாவது ஜாமீனில் வெளியே கொண்டு வர முயற்சி எடுக்கும்படியும் அவர் கூறி வந்துள்ளார். அதேசமயம் அவர் தனது குடும்பத்தினர் யாரையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை எனவும் போலீசார் கூறினர்.
இதற்கிடையே கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷனின் பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது நடிகர் தர்ஷன் மீது ஏற்கனவே, மனைவி மீது தாக்குதல், புலி நகம் பயன்படுத்திய விவகாரம், வளர்ப்பு நாய் பெண்ணை தாக்கிய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அதனை தொடர்ந்து ரேணுகாசாமி கொலை வழக்கை பயன்படுத்தி நடிகர் தர்ஷன் பெயரை ரவுடி பட்டியலின் கீழ் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்றுடன் நீதிமன்றம் காவல் முடிவடைந்தநிலையில், இன்று நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 17 பேரையும் காணொலி காட்சியின் மூலம் பெங்களுர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது 17 பேரையும் வரும் ஜூலை 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.