மனைவியால் தொல்லை... தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கிரிக்கெட் வீரர்
|பெங்களூருவில் தொடரும் சம்பவமாக, மனைவி தொல்லை தாங்க முடியாமல் கிரிக்கெட் வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு,
பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் அதுல் சுபாஷ் தனது மனைவியால் துன்புறுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது பெங்களூருவில் மனைவியின் தொல்லையால் பாதிக்கப்பட்ட மற்றொருவர் நபர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு வடக்கு தாலுகா சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எசருகட்டா மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் பாலராஜ் (40). உள்ளூர் கிரிக்கெட் வீரர். இவரது மனைவி குமாரி. பாலராஜிக்கு, குமாரி 2-வது மனைவி ஆவார். கடந்த 18 ஆண்டுக்கு முன்பு 2 பேருக்கும் திருமணம் நடந்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக தம்பதி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
மேலும் குமாரிக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி கேட்டதால் பாலராஜிடன் சண்டை போட்டு வந்ததுடன், அவருக்கு தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் கணவருடன் வாழ பிடிக்காமல் குமாரி பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த பாலராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், மனைவி தொல்லை மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும், தான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால், கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசு கோப்பைகள், கிரிக்கெட் மட்டை, பந்து உள்ளிட்டவற்றை தனது உடலுடன் வைத்து இறுதிச்சடங்கு செய்யும்படி பாலராஜ் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.