ராஜ்பவனிலிருந்து வெளியேறுங்கள்: கொல்கத்தா போலீஸாருக்கு கவர்னர் உத்தரவு?
|கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கவர்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கும், கவர்னர் சி.வி.ஆனந்தபோஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் அம்மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நேற்று கவர்னர் ஆனந்தபோஸை சந்திக்க வந்தனர். அப்போது அவர்கள் கவர்னர் மாளிகைக்குள் நுழைவதை போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. கவர்னரை சந்திக்க எழுத்துப்பூர்வ அனுமதி இருந்த போதிலும் போலீசார் அனுமதிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த கவர்னர், ராஜ் பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்டோரை உடனடியாக காலிசெய்துவிட்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன. ராஜ்பவனின் வடக்கு கேட் அருகே உள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டை பொது மேடை ஆக மாற்ற கவர்னர் ஆனந்த போஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.