மேற்கு வங்காள வெள்ளம்: பிரதமர் மோடிக்கு மம்தா புகார் கடிதம்
|வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்
கொல்கத்தா,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீரால் மேற்கு வங்காளத்தின் தெற்கு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை ஒருதலைப்பட்சமாக விடுவிப்பதற்காக தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்வதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், "வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்ய மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடந்த 2009க்கு பிறகு தாமோதர் பள்ளத்தாக்கு அணைகளில் இருந்து வரும் தண்ணீரால் மாநிலம் இப்போதுவரை மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொள்கிறது. இந்த விஷயத்தை நீங்கள் தீவிரமாக பரிசீலித்து, கணிசமான மத்திய நிதியை விடுவிப்பது தொடர்பாக அமைச்சகங்களுக்கு உத்தரவிடுமாறு நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக விரிவான வெள்ள மேலாண்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுக்கு சொந்தமான மைத்தான் மற்றும் பஞ்செட் அணைகளின் ஒருங்கிணைந்த அமைப்பில் இருந்து கிட்டத்தட்ட 5 லட்சம் கன அடியில் திட்டமிடப்படாத மற்றும் ஒருதலைப்பட்சமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது இந்த பேரழிவிற்கு வழிவகுத்தது. இதனால் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.