சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை
|குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 21 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பராக்கா பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதி ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனபந்து ஹல்தர், சுபோஜித் ஹல்தர் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், முக்கிய குற்றவாளியான தீனபந்து அந்த சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்து, ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும், சுபோஜித் இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த முர்ஷிதாபாத் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. முக்கிய குற்றவாளியான தீனபந்துவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சுபோஜித்துக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.
இந்த தீர்ப்பு குறித்து காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சுப்ரதிம் சர்க்கார் கூறுகையில், "குற்றவாளி தீனபந்து விஜயதசமியன்று அந்த சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்து அவரது வலையில் வீழ்த்தி, அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இறந்த பின்னரும் சிறுமியின் உடலுடன் உறவு கொண்டுள்ளார். இந்த செயல் நெக்ரோபிலியா என அழைக்கப்படுகிறது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 21 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. " என்றார்.
இந்த தீர்ப்பை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். ஒவ்வொரு கற்பழிப்பு குற்றவாளியும் மரண தண்டனை பெற தகுதியானவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜோய் நகரில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு கடந்த 6-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.