< Back
தேசிய செய்திகள்
யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும்.. - ஆந்திர உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்
தேசிய செய்திகள்

'யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும்..' - ஆந்திர உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
5 Nov 2024 7:04 AM IST

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும் என ஆந்திர மாநில உள்துறை மந்திரிக்கு பவன் கல்யாண் அறிவுறுத்தியுள்ளார்.

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும் எனவும் ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பித்தாபுரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "உள்துறை மந்திரி அனிதாவிடமும் ஒன்றை சொல்கிறேன், நீங்கள் உள்துறை மந்திரி, நான் பஞ்சாயத்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி. உங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றுங்கள், இல்லையென்றால் நான் உள்துறையையும் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அரசியல் தலைவர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு கேட்க மட்டும் இங்கு வரவில்லை, நமக்கும் பொறுப்புகள் உள்ளன. என்னால் உள்துறையை பெற முடியாமல் இல்லை. நான் உள்துறை மந்திரியானால் விஷயங்கள் வேறு விதத்தில் கையாளப்படும். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் நாம் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் போல் செயல்பட வேண்டும். இல்லையெனில் நிலைமை மாறாது" என்று தெரிவித்தார்.

பவன் கல்யாணின் இந்த பேச்சால் ஜனசேனா கட்சிக்குள் பிளவு ஏற்படுமா? என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில், துணை முதல்-மந்திரி என்ற முறையில் மந்திரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் பவன் கல்யாணுக்கு உரிமை உள்ளது என மாநில அரசின் மூத்த மந்திரி பி.நாராயண் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்