கொல்கத்தாவில் வங்காளதேச புடவைகளை எரித்து போராட்டம்
|கொல்கத்தாவில் வங்காள இந்து சுரக்சா சமிதி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொல்கத்தா:
வங்காளதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து இந்தியாவில் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.
அவ்வகையில் கொல்கத்தாவில் வங்காள இந்து சுரக்சா சமிதி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வங்காளதேசத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும், இந்தியர்கள் அனைவரும் வங்காளதேச பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அத்துடன், வங்காளதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜம்தானி புடவைகளை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
வங்காளதேசத்தில் யாரேனும் இந்திய தேசியக்கொடியை அவமதித்தாலோ, இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ இந்தியர்கள் அமைதியாக இருக்கமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், "வங்காளதேசத்தில் இந்துக்களை தொடர்ந்து குறிவைப்பதையும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்பூட்டும் கதைகளை பரப்புவதையும் கண்டிக்கிறோம். இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். ஜம்தானி புடவைகளை எரித்துவிட்டு, வங்காளதேச தயாரிப்புகளை புறக்கணிக்கவேண்டும் என மக்களை வலியுறுத்துகிறோம்.
இது எந்த மாதிரியான வங்காளதேச நாடு? 1971-ல் விடுதலைக்காகப் போராடிய மக்கள் இப்போது தங்கள் வரலாற்றையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என மற்றொரு போராட்டக்காரர் கூறினார்.
இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வங்காளதேச அரசுடன் தூதரக ரீதியில் இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.