< Back
தேசிய செய்திகள்
டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றார் அதிஷி
தேசிய செய்திகள்

டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றார் அதிஷி

தினத்தந்தி
|
21 Sep 2024 11:37 AM GMT

டெல்லியின் முதல்-மந்திரியாக பதவியேற்ற மூன்றாவது பெண் அதிஷி ஆவார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்-மந்திரி அலுவலகம் செல்லக் கூடாது. முதல்-மந்திரியாக கோப்புகளை கையாளக் கூடாது என நிபந்தனை விதித்தது.

சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-மந்திரி நாற்காலியில் அமரமாட்டேன் என்று கூறி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக மூத்த மந்திரி அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் டெல்லி துணை நிலை கவர்னரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து புதிய அரசு அமைக்க அதிஷி உரிமை கோரினார். இதையடுத்து, டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதத்தையும், புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதிஷி மற்றும் 5 மந்திரிகளுக்கான நியமனத்திற்கும் அனுமதியளித்துள்ளார்.

இந்த நிலையில் டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

டெல்லி துணை நிலை கவர்னர் இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அரவிந்த கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, பாஜக மாநில தலைவர், டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அதிஷியுடன் 5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவியேற்கின்றனர். முதல்-மந்திரி அதிஷி தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 மந்திரிகளான கோபால் ராய், சவுரப் பரத்வாஜ், இம்ரான் ஹூசைன், முகேஷ், கைலாஷ் கெலாட் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் முதல்-மந்திரியாக பதவியேற்ற மூன்றாவது பெண் அதிஷி ஆவார். மேலும், டெல்லியின் இளம் வயது முதல்-மந்திரி என்ற பெருமையையும் அதிஷி பெறுகிறார்.

பதவியேற்புக்கு பிறகு 26 மற்றும் 27-ந் தேதிகளில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் தனது ஆட்சி பெரும்பான்மையை அதிஷி நிரூபிப்பார். 70 பேர் கொண்ட டெல்லி சட்டசபையில் 61 இடங்களை ஆம் ஆத்மி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்