< Back
தேசிய செய்திகள்
சட்டசபை தேர்தல்;  மராட்டியம், ஜார்கண்டில்  நாளை வாக்குப்பதிவு
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்; மராட்டியம், ஜார்கண்டில் நாளை வாக்குப்பதிவு

தினத்தந்தி
|
19 Nov 2024 7:18 AM IST

மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 2 மாநிலங்களிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

மும்பை,

288 -சட்ட சபை தொகுதிகளை கொண்ட மராட்டியத்தில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. மராட்டியதில் பாஜக, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மராட்டியத்தில் அனல் பறக்க பிரசாரம் நடைபெற்றது. நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேறுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தல் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 13-ந்தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அங்கு 2-வது கட்டமாக 38 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் உள்ளார். இங்கு ஆளும் இந்தியா கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வரும் 23-ந்தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்