< Back
தேசிய செய்திகள்
சட்டசபை தேர்தல்: அரியானாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்: அரியானாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

தினத்தந்தி
|
4 Oct 2024 8:56 AM IST

அரியானாவில் சட்டசபை தேர்தலுக்கான அனல் பறந்த பிரசாரம் நேற்று ஓய்ந்தது.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில், நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அதன் பதவிக்காலம் முடிவடைவதால், நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. அரியானாவில் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவிற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

அரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. கடந்த சில நாட்களாக நடந்து வந்த அனல் பறந்த பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து 3-வது தடவையாக ஆட்சியை பிடிப்பதில் பாஜகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக உள்ளன.

மேலும் செய்திகள்