அசாம் சுரங்க விபத்து: மேலும் ஒரு தொழிலாளி உடல் மீட்பு
|அசாம் சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கவுகாத்தி,
அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் கடந்த 6ம் தேதி மழையால் வெள்ள நீர் புகுந்தது. அப்போது சுரங்கத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்களில் சிலர் தப்பி வெளியே வந்த நிலையில் 9 பேர் அதில் சிக்கிக்கொண்டனர்.
தப்பி வெளியே வந்தவர்கள் சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் போலீசாரிடம் சுரங்க விபத்து பற்றி கூறியுள்ளனர். இதனையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை உறுதி செய்துள்ள அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, மீட்பு பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு படை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். ராணுவ உதவியும் கோரப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 8ம் தேதி சுரங்கத்தில் இருந்து தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுரங்கத்தில் 7 பேர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.