< Back
தேசிய செய்திகள்
அசாமில் கனமழைக்கு 56 பேர் பலி
தேசிய செய்திகள்

அசாமில் கனமழைக்கு 56 பேர் பலி

தினத்தந்தி
|
4 July 2024 9:57 PM IST

தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகமாகி உபரி நீர் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

கவுகாத்தி,

வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசம், டெல்லி, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அசாமில் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள 29 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. ஆறுகளில் நீர்வரத்து அதிகமாகி உபரி நீர் வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

இதன் காரணமாக பர்படா, பிஷ்வனாத், சிராஜ், திப்ரி, திருப்ரூகார் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதோடு வாழ்வாதாரத்தையும் அவர்கள் இழந்துள்ளனர். கனமழை காரணமாக திப்ரியில் 2.23 லட்சம் பேரும், தராவ் மாவட்டத்தில் 1.84 லட்சம் பேரும், லட்சுமிபூரில் 1.66 லட்சம் பேரும் என மொத்தம் 16½ லட்சம் பேர் மழையால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து ஆதரவின்றி உள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட கவுகாத்தி, மலிகான்படுதாக் உள்ளிட்ட பகுதிகளை மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சேத மதிப்புகள் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் கணக்கிடப்படும் என்றும், அதன்பின்னர் மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வெள்ள பாதிப்புகளை அசாம் மாநில மந்திரிகளும் நேரில் பார்வையிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்கள்.

கனமழை, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பராக் நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் ஓடுவதால், கரையோர பகுதி மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உலக பாரம்பரிய சின்னமான காசிரங்கா உயிரியல் பூங்காவுக்குள் வெள்ளம் புகுந்ததால், 17 விலங்குகள் இதுவரை இறந்துள்ளன. மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 72 விலங்குகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்