திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை
|சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அதேவேளை, கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்டு வழக்கை கடந்த 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதன்பின்னர், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த 5ம் தேதி வரை கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. அதில், கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். 6 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
திகார் சிறையில் இருந்து விடுதலையான கெஜ்ரிவாலை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில், எனது விடுதலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தைரிய மழையை வரவைத்துள்ளீர்கள். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடினமான சூழ்நிலையை சந்தித்தபோதும் கடவுள் எப்போதும் என்னுடன் உள்ளார். எனது உறுதி 100 சதவீதம் வலிமையடைந்துள்ளது ' என்றார்.