சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் உயிரிழப்பு
|சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆயுதப்படை போலீஸ்காரர் உயிரிழந்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தை சேர்ந்தவர் மனு. இவர், பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள நகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். ஆசாத்நகரில் தங்கியிருந்து மனு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் நாகரபாவிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இரவு 8.30 மணியளவில் நாயண்டஹள்ளி ரிங் ரோடு அருகே வரும் போது திடீரென்று மனுவின் கட்டுப்பாட்டை இழந்து, அதே சாலையில் சென்ற ஒரு சரக்கு ஆட்டோவின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மனு பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
உடனே அங்கிருந்தவர்கள் போலீஸ்காரர் மனுவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மனு பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில், தார் சாலையில் மண் குவிந்து கிடந்ததும், அதனை கவனிக்காமல் மனு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோவில் மோதியதும் தெரியவந்தது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.