டி.வி.யில் ஆபாச விளம்பரங்கள் தொடர்பாக 73 புகார்கள் - நாடாளுமன்றத்தில் எல்.முருகன் தகவல்
|டி.வி. சேனல்களில் விளம்பரச் சட்டத்தை மீறுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த 3 ஆண்டுகளில் ஒழுங்குமுறை அமைப்புகளால் தனியார் டி.வி. சேனல்களில் ஆபாசமான மற்றும் மோசமான விளம்பரங்களுக்கு எதிராக 73 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் பொருத்தமான குறை தீர்க்கும் அமைப்புகள் மூலம் தீர்க்கப்பட்டன. டி.வி. சேனல்களில் விளம்பரச் சட்டத்தை மீறுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐ.டி. விதிகள், 2021-ன் பகுதி 3-ன் கீழ் ஓ.டி.டி. தளங்கள் நெறிமுறைக் குறியீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த குறியீடுகள் இயற்கையில் சுய கட்டுப்பாடு கொண்டவை. இந்த நெறிமுறைகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்த உள்ளடக்கத்தையும் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.