பீகாரில் மீண்டும் பாலம் விபத்து: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்ததால் பரபரப்பு
|பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி நகரில் கால்வாய் ஒன்றின் மீது புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது. அங்குள்ள அம்வா கிராமத்தை மாவட்டத்தின் பிற பகுதிகளுடன் இணைக்க ரூ.1½ கோடி செலவில் மாநில ஊரகப்பணித்துறையால் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை இந்த பாலம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து மாநில ஊரகப்பணித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக் குமார் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், "சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இது தீவிரமான விவகாரம், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முன்னதாக பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள தரவுண்டா மற்றும் மகாராஜ்கஞ்ச் கிராமங்களை இணைக்கும் வகையில் கால்வாயின் மீது கட்டப்பட்டிருந்த 45 ஆண்டுகள் பழமையான பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. அதற்கு முன்பாக அராரியா மாவட்டத்தில் உள்ள குர்சா காந்தா மற்றும் சிக்டி பகுதிகளை இணைக்கும் வகையில் பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்ட புதிய பாலம் கடந்த 18-ந் தேதி திடீரென இடிந்து விழுந்தது.
ரூ.12 கோடி செலவில் மாநில அரசால் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்தது, பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பொதுப்பணிகளின் தரம் குறித்த கேள்விகள் எழுவதற்கு இவை வழிவகுத்துள்ளன.