< Back
தேசிய செய்திகள்
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
18 Nov 2024 12:52 PM IST

சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக பக்கத்து வீட்டு சிறுவன் மீது புகார் கொடுக்க சிறுமியின் பெற்றோர், அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணன், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த தமிழர் அல்லாத தமிழ்நாட்டுப் பிரிவை சேர்ந்த 7 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களையும் பரிந்துரைக்க தமிழ்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்கும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 18-ந்தேதி (அதாவது இன்று) தள்ளிவைத்தது.

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டால் வழக்கு முடிய அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகள் கூட, ஆகலாம். எனவே வழக்கை தமிழக போலீசாரே விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு கூறுகையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்த வழக்கிற்கான சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும். காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தலாம். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும். நாள்தோறும் புலன் விசாரணை நடத்த வேண்டும். புலன் விசாரணை அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் வாரந்தோறும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும், வழக்கு செலவுக்காக ரூ.50 ஆயிரம், இதர செலவுகளுக்காக ரூ.25 ஆயிரம் சிறுமியின் தாய்க்கு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்