< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் ரூ.2.94 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
தேசிய செய்திகள்

ஆந்திராவில் ரூ.2.94 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

தினத்தந்தி
|
11 Nov 2024 5:28 PM IST

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி பையாவுல கேசவ், இது மாநிலத்தின் நிதிச் சக்கரங்களை சரிசெய்து சுழலச் செய்வதை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் என்று குறிப்பிட்டார்.

அமராவதி:

ஆந்திர மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய அரசாங்கம், 2024-25ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

இந்நிலையில், புதிய அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. 2024-25ம் நிதியாண்டில் இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ரூ.2.36 லட்சம் கோடி வருவாய் செலவினம் மற்றும் ரூ.32,713 கோடி மூலதனச் செலவீனத்துடன் நிதியாண்டுக்கான 2.94 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் வசம் உள்ள பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.16,739 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.29,909 கோடி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,421 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி பையாவுல கேசவ், இது மாநிலத்தின் நிதிச் சக்கரங்களை சரிசெய்து சுழலச் செய்வதை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் என்றார். மாநிலத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டும், வளத்தை உருவாக்குவதன் மூலம் நிதி ரீதியாக புத்துயிர் பெறுவதற்கும் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்றும் குறிப்பிட்டார்.

நடப்பு நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ. 34,743 கோடி (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 2.12 சதவீதம்) மற்றும் நிதிப் பற்றாக்குறை சுமார் ரூ.68,743 கோடியாக (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4.19 சதவீதம்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இன்றைய கூட்டத்தொடரை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்