தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ரூ.30 கோடி பந்தயம்... அடுத்து நடந்த விபரீதம்
|ஆந்திராவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
அமராவதி,
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. அங்கு முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த நிலையில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே தேர்தல் முடிவு வெளியான நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெறும் என 30 கோடி ரூபாய் வரை பந்தயம் கட்டியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்கவரபு வேணுகோபால ரெட்டி (வயது 52). ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆதரவாளரான இவர், தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஜெயிக்கும் என்று சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களிடம் சுமார் ரூ.30 கோடி வரை பந்தயம் கட்டியுள்ளார். இந்த நிலையில் கட்சி படுதோல்வி அடைந்ததால் அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் தலைமறைவானார்.
வேணுகோபால ரெட்டி தலைமறைவானதை தொடர்ந்து, அவரிடம் பந்தயம் கட்டியவர்கள், அவரது வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து ஏ.சி.க்கள், சோபா, கட்டில்கள், வாஷிங் மெஷின், மின்விசிறி உள்பட அவரவர் கைகளுக்கு கிடைத்த பொருட்களை அள்ளிச்சென்றனர். இதனால் மனமுடைந்த வேணுகோபால ரெட்டி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.