< Back
தேசிய செய்திகள்
அமிர்தசரஸ் கோவில் குண்டுவெடிப்பு: சந்தேக நபரை சுற்றி வளைத்த போலீஸ்.. அடுத்து நடந்த சம்பவம்
தேசிய செய்திகள்

அமிர்தசரஸ் கோவில் குண்டுவெடிப்பு: சந்தேக நபரை சுற்றி வளைத்த போலீஸ்.. அடுத்து நடந்த சம்பவம்

தினத்தந்தி
|
17 March 2025 2:16 PM IST

அமிர்தசரஸ் கோவில் மீதான வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள தாகூர் துவாரா கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த வெடிகுண்டு தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கோவிலுக்கு வெளியே ஒரு நபர் வெடிகுண்டை வீச, அது கோவில் சுவரின் ஒரு பகுதியை பதம் பார்த்தது. ஜன்னல் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும், பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத 2 நபர்கள் பைக்கில் கோவிலுக்கு வந்தது பதிவாகியிருந்தது. கோவிலுக்கு வந்த உடன், அவர்களில் ஒரு நபர் கோவிலை நோக்கி வெடிகுண்டை வீசியதும், பின்னர் இருவரும் தப்பிச் சென்றதும் பதிவாகியிருந்தது.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு இருக்கலாம் என காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது. இந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள் அமிர்தசரஸ் அருகே உள்ள ராஜசான்சி நகரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்த தனிப்படை போலீசார், இன்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது அந்த நபர்கள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களுக்கு போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு நபர் கொல்லப்பட்டார். இன்னொருவர் தப்பிச் சென்றுவிட்டார்.

இதுபற்றி பஞ்சாப் காவல்துறை தலைவர் கவுரவ் யாதவ் கூறுகையில், "உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்காணித்து கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் அவர்களை கைது செய்ய முயன்றபோது துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலைமை காவலர் குர்பிரீத் சிங் காயமடைந்தார். மேலும் இன்ஸ்பெக்டர் அமோலக்கின் தலைப்பாகையை குற்றவாளிகள் தாக்கினர். தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் தப்பிச் சென்றுவிட்டார். காயமடைந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். தப்பி ஓடிய நபரை தேடி வருகிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்