சத்தீஷ்காரில் அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணம்; நக்சலைட்டுகள் ஒழிப்பு பற்றி ஆலோசனை
|சத்தீஷ்காரில் பாதுகாப்புக்கான சவால்கள் மற்றும் வளர்ச்சியை வளர்த்தெடுப்பது ஆகியவற்றை கையாளுவதில் அரசின் உள்ளார்ந்த ஈடுபாட்டை அமித்ஷாவின் இந்த பயணம் எடுத்து காட்டுகிறது.
புதுடெல்லி,
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்களை சரணடைய செய்ய அல்லது தேசிய நீரோட்டத்தில் பங்கு பெற செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நக்சலைட்டுகளை ஒழிக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 14-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு சத்தீஷ்காரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ராய்ப்பூர் நகரில் உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வு கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்த உள்ளார்.
இந்த பயணத்தில் சத்தீஷ்காரில் பாதுகாப்பு சூழல் மற்றும் அது தொடர்பான முன்னேற்ற விசயங்களில் அவர் கவனம் செலுத்துகிறார். ஜக்தல்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், சரணடைந்த மாவோயிஸ்டுகள், குடியிருப்புவாசிகள் மற்றும் அறிஞர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடுகிறார். பஸ்தார் ஒலிம்பிக்ஸ் நிறைவு விழாவிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
இடதுசாரி பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திப்பதுடன், வீரமரணம் அடைந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகிறார். பாதுகாப்பு முகாம்களுக்கு நேரில் சென்று வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் உணவும் உண்கிறார்.
சத்தீஷ்காரில் பாதுகாப்புக்கான சவால்கள் மற்றும் வளர்ச்சியை வளர்த்தெடுப்பது ஆகியவற்றை கையாளுவதில் அரசின் உள்ளார்ந்த ஈடுபாட்டை அவருடைய இந்த பயணம் எடுத்து காட்டுகிறது.
இதற்கு முன்பு, முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், நவா ராய்ப்பூர் பகுதியில் அமைந்த போலீஸ் தலைமையகத்தில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளை பற்றி ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அவர், துணை முதல்-மந்திரிகளான அருண் சாவோ மற்றும் விஜய் சர்மா ஆகியோருடன் சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
நக்சல்வாதத்திற்கு எதிரான போரை பாதுகாப்பு படைகள் வலுவாக மேற்கொண்டு வருகின்றன. நாங்கள் பொறுப்பேற்றதில் இருந்து இந்த விசயத்தில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் அரசு செயல்பட்டு வருகிறது என அவர் உறுதியுடன் கூறினார்.