'அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' - மாயாவதி
|அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடந்த அரசியல் சாசனம் மீதான சிறப்பு விவாதத்தின்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்" என்றார்.
அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அவர் இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"இந்திய அரசியலமைப்பின் சிற்பியும், தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் வணக்கத்திற்குரிய கடவுளும், பாதுகாவலருமான பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் பற்றி நாடாளுமன்றத்தில் அமித்ஷா பயன்படுத்திய வார்த்தைகள் அம்பேத்கரின் கண்ணியத்தை பெரிதும் பாதித்துள்ளது.
அமித்ஷாவின் பேச்சு அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்ளது. நாடு முழுவதும் அம்பேத்கரை பின்பற்றுபவர்களிடையே இது மிகப்பெரிய கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா தனது வார்த்தைகளை விரைவில் திரும்பப் பெற வேண்டும். தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அம்பேத்கரை பின்பற்றுபவர்களால் இந்த சம்பவத்தை மறக்கவும் முடியாது, அமித்ஷாவை மன்னிக்கவும் முடியாது.
அதே சமயம் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செய்த மோசமான செயல்களை இன்னும் மறக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது நடத்தையை எவ்வளவு மாற்றிக்கொண்டாலும், அவர்களை அம்பேத்கரை பின்பற்றுபவர்கள் மன்னிக்கப் போவதில்லை. அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, வரலாற்றின் பக்கங்களில் இருந்து அவரது பெயரையும், அரசியலமைப்பு உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் நீக்க காங்கிரஸ் முயற்சித்தது."
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.