மணிப்பூர் வன்முறை: உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை
|மணிப்பூர் வன்முறை தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
டெல்லி,
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதேவேளை, கடந்த சில மாதங்களாக மோதல் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பயங்கரவாதிகளால் இளம்பெண் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டார். வீடுகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து, அம்மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டம் ஜக்குரதூர் நகரில் உள்ள காவல் நிலையம், மத்திய பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் கடந்த 11ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் குகி பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனிடையே, இந்த என்கவுன்டர் சம்பவத்திற்கு மறுநாளான 12ம் தேதி ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தை சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை குகி பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். மேலும், மெய்தி சமூகத்தை சேர்ந்த 2 ஆண்களையும் (வயது 76, 54) குகி பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துக்கொன்றுள்ளனர்.
கடத்தப்பட்ட 6 பேரும் கொடூரமான முறையில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்ட 6 பேரில் 3 பெண்களின் உடல்கள் ஜிரிபாம் ஆற்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. 3 குழந்தைகளும் கொல்லப்பட்டன.
இந்த கொடூர செயலை தொடர்ந்து மணிப்பூரில் வன்முறை வெடித்தது. பயங்கரவாதிகளை ஒழிக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் பாஜக எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதையடுத்து, மணிப்பூரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
மராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமித்ஷா, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். டெல்லியில் பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகளுடன் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மணிப்பூரில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்கவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையை தொடர்ந்து மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நாளை மதியமும் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.