
மோடி அரசு பயங்கரவாதிகளை 'அழிக்க' உறுதியாக உள்ளது: அமித்ஷா

பயங்கரவாதம் முழு மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி, முழு உலகமும் அதற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது என அமிதஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தி்ல் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவை உலுக்கியது.
இந்த தாக்குதலின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். மேலும், இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நன்றியுள்ள தேசத்தின் சார்பாக எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.
பயங்கரவாதம் முழு மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி, முழு உலகமும் அதற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. அது ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் அல்லது வான்வழித் தாக்குதலாக இருந்தாலும், பயங்கரவாதிகளுக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையுடன் பிரசாரத்தை நடத்துவதன் மூலம் அவர்களை முற்றிலுமாக அழிக்க மோடி அரசு உறுதியாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.