ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் - மெகபூபா முப்தி விமர்சனம்
|ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது குறித்து மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
துணை நிலை கவர்னருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இருந்து அனைத்தையும் பறிக்கும் வகையில் ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரை ஒரு நகராட்சியாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது.
நாளை ஜம்மு காஷ்மீரில் எந்த அரசு அமைந்தாலும், அது பா.ஜ.க.வால் அமையாவிட்டால், அந்த அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. அந்த அரசின் உரிமைகளை பறித்து தலைமைச் செயலாளர் மற்றும் துணை நிலை கவர்னரிடம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். வெளியே இருந்து வரும் அந்த துணை நிலை கவர்னருக்கு இந்த பகுதியைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது.
இங்குள்ள மக்களை நீங்கள் நம்பவில்லை என்றால், அவர்களை ஏன் இங்கு வைத்திருக்கிறீர்கள்? காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டீர்கள்."
இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.