< Back
தேசிய செய்திகள்
தேர்தல் விதிகளில் திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு
தேசிய செய்திகள்

தேர்தல் விதிகளில் திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு

தினத்தந்தி
|
24 Dec 2024 3:54 PM IST

தேர்தல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

புதுடெல்லி,

வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சி.சி.வி.டி., வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று பரிசோதிக்க முடியும். இதற்கு மத்திய சட்ட அமைச்சகம் தேர்தல் நடத்தை விதி 93 (2) (a)-ன் படி 'தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்' என்ற விதி நடைமுறையில் இருக்கிறது.

இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, விதி 93 (2) (a) கீழ், 'தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும்' என திருத்தம் செய்து மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டப் பிரிவில் குறிப்பிட்டுள்ள 'காகித ஆவணங்களை மட்டுமே புகார் தாரர்கள் பார்க்க முடியும்' என அதிகாரிகள் தெளிவுப்படுத்துகின்றனர். இதன் அடிப்படையில், வேட்புமனு படிவம், தேர்தல் முகவர்கள் நியமனம், முடிவுகள் மற்றும் தேர்தல் கணக்கு அறிக்கைகள் போன்றவை மட்டுமே பொதுமக்களால் பார்க்க முடியும். சி.சி.டி.வி. உள்ளிட்ட மின்னணு ஆவணங்கள் எதுவும் தனியாக அதில் குறிப்பிடப்படவில்லை. எனவே, மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது.

இதன் மூலம், வாக்குச்சாவடி மைய சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை யாரும் எளிதில் பார்வையிட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளும் சூழல் தடுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தும் பொறுப்பை கொண்டிருக்கும் அரசியல்சாசன அமைப்பான தேர்தல் ஆணையம், இவ்வாறு ஒருதலைப்பட்சமாகவும், பொது ஆலோசனை இல்லாமலும் இத்தகைய முக்கிய சட்டத்தை திருத்துவதை அனுமதிக்க முடியாது.

தேர்தல் நடத்தை விதிகள், 1961-ல் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையை வெளிப்படையானதாகவும், பொறுப்பானதாகவும் ஆக்கும் அத்தியாவசிய தகவல்களுக்கான பொது அணுகலை இந்த திருத்தம் நீக்குகிறது. தேர்தல் நடைமுறையின் நேர்மை வேகமாக அழிந்து வருகிறது. அதை மீட்டெடுக்க சுப்ரீம் கோர்ட்டு உதவும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்