அமராவதியே ஆந்திராவின் தலைநகர் - சந்திரபாபு நாயுடு உறுதி
|போலாவரம் திட்டமும் நிறைவேற்றப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
விஜயவாடா,
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக கடந்த 2014-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு அதன் தலைநகரமாக ஐதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். ஆனால் 2019-ல் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவுக்கு 3 தலைநகர் என அறிவித்தார். விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டசபை தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும் என அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமராவதியை ஆந்திர தலைநகராக உருவாக்க மார்ச் 2022ல் ஆந்திரா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் தலைநகர் குறித்து விளக்கமாக பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதிதான் இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை. 3 தலைநகர், 4 தலைநகர் என வஞ்சக செயல்களால் மக்களோடு விளையாட மாட்டோம். அமராவதி தான் எங்களின் தலைநகர். அதேநேரம், விசாகப்பட்டினம் மாநிலத்தின் வர்த்தக தலைநகராக இருக்கும். மேலும் ராயலசீமாவையும் வளர்ச்சியடையச் செய்வோம். போலாவரம் திட்டமும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.