< Back
தேசிய செய்திகள்
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியா? கெஜ்ரிவால் பதில்
தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியா? கெஜ்ரிவால் பதில்

தினத்தந்தி
|
1 Dec 2024 5:16 PM IST

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட நிலையில், அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.

புதுடெல்லி,

டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, நேற்று நடந்த அரசியல் பேரணியில் அவர் மீது திரவம் ஊற்றப்பட்ட சம்பவம் பற்றி குறிப்பிட்டார்.

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில், அமித்ஷா சில நடவடிக்கைகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அதற்கு பதிலாக பாதயாத்திரையின்போது தாக்கப்பட்டேன். திரவம் ஊற்றியதில் தீங்கு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அது தீய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறியுள்ளார்.

வரவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரசுடனோ அல்லது இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடனோ கூட்டணியா? என நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், டெல்லியில் கூட்டணி இருக்காது என கூறியுள்ளார். இதனால், அக்கட்சி தேர்தலை தனித்து சந்திக்க உள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. ஆனால், அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது. இதேபோன்று அரியானாவில் அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, தொகுதி பங்கீடு பற்றி ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

தெற்கு டெல்லியின் ஷேக் சராய் பகுதியில் நேற்று மாலை கெஜ்ரிவால் பாதயாத்திரை மேற்கொண்டார். அவருடன் டெல்லி மந்திரி மற்றும் கிரேட்டர் கைலாஷ் தொகுதியின் எம்.எல்.ஏ.வான சவுரப் பரத்வாஜ் சென்றார். அப்போது, நபர் ஒருவர் கெஜ்ரிவாலை நோக்கி மர்ம திரவத்தினை ஊற்றினார்.

இதனால், கெஜ்ரிவால் மற்றும் அவரை சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரின் பாதுகாப்பு அதிகாரிகளும், ஆதரவாளர்களும் அந்த நபரை சூழ்ந்து, பிடித்து கொண்டனர். அவர் அசோக் ஜா என பின்னர் அடையாளம் காணப்பட்டார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கெஜ்ரிவால் மீது 35 நாட்களில் நடத்தப்படும் 3-வது தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதலை தொடர்ந்து, உடனடியாக பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு கூறியது. அந்த நபர் பா.ஜ.க.வுடன் தொடர்புடைய நபர் ஆவார் என டெல்லி மந்திரி சவுரப் பரத்வாஜ் கூறினார். மத்திய அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா எதுவும் செய்யவில்லை என குற்றச்சாட்டாக அவர் கூறினார். எனினும், இது கெஜ்ரிவால் நடத்தும் நாடகம் என பா.ஜ.க. கூறியுள்ளது.

மேலும் செய்திகள்