< Back
தேசிய செய்திகள்
தேச வளர்ச்சி, ஏழைகளை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவதே கூட்டணியின் நோக்கம்:  பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

தேச வளர்ச்சி, ஏழைகளை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவதே கூட்டணியின் நோக்கம்: பிரதமர் மோடி

தினத்தந்தி
|
18 Oct 2024 12:49 AM IST

பிரதமர் மோடி தலைமையிலான முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் பங்கேற்ற கூட்டத்தில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சண்டிகார்,

அரியானாவின் சண்டிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் ஒன்றை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்தினார்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார். தொடர்ந்து அவர், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகளுக்கான கூட்டத்திற்கு தலைமையேற்றேன். சிறந்த நிர்வாகத்திற்கான அம்சங்கள் மற்றும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிகள் ஆகியவற்றை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டன.

நம்முடைய கூட்டணியானது, தேசத்திற்கான வளர்ச்சி மற்றும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதற்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளார். கூட்டத்தில் தேச முன்னேற்றத்திற்கான விசயங்கள், அமுத காலம் மற்றும் ஜனநாயக படுகொலை முயற்சிக்கான 50-வது ஆண்டு தினம் உள்ளிட்ட விசயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மொத்தம் 13 முதல்-மந்திரிகள் மற்றும் 16 துணை முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்