< Back
தேசிய செய்திகள்
வங்காளதேசத்தில் இஸ்கான் மையத்தின் மீது தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

வங்காளதேசத்தில் 'இஸ்கான்' மையத்தின் மீது தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
7 Dec 2024 4:29 PM IST

வங்காளதேசத்தில் உள்ள 'இஸ்கான்' மையத்தின் மீது தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொல்கத்தா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவாமி லீக் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது. இதையடுத்து வங்காளதேசத்தின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்றார். அதன் பிறகு, அங்குள்ள சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், இஸ்கான் அமைப்பின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வங்காளதேசத்தில் உள்ள 'இஸ்கான்' மையத்தின் மீது தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கொல்கத்தா 'இஸ்கான்' துணை தலைவர் ராதாராம் தாஸ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டாக்காவில் உள்ள 'இஸ்கான்' மையத்தில் இன்று அதிகாலை 2 முதல் 3 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அங்குள்ள சிலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ராதாராம் தாஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, "வங்காளதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு குறித்து 'இஸ்கான் இந்தியா' அமைப்பு கவலை கொள்கிறது. அங்குள்ள துறவிகளிடம் நெற்றியில் திலகம் அணிய வேண்டாம் எனவும், ரகசியமான முறையில் வழிபாடுகளை நடத்துமாறும் அறிவுறுத்தியிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சுகந்தா மஜும்தார் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வங்காளதேசத்தின் டாக்காவில் உள்ள 'இஸ்கான்' மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. வழிபாட்டுத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மன்னிக்க முடியாது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்