
திரிவேணி சங்கம தண்ணீர் குளிப்பதற்கு தகுதியற்றது: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிர்ச்சி தகவல்

அதிக அளவில் பக்தர்கள் நீராடுவதால், மனிதக் கழிவுகள் அதில் அதிகம் கலந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
பிரயாக்ராஜ்,
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. இதில், நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 55 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
வரும் 26ம் தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே இன்னும் பலர் புனித நீராட வருவார்கள் என்று எதிர்பார்ப்பதால், 55 கோடி என்ற எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தநிலையில் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் மற்றும் கும்பமேளா பக்தர்கள் நீராடும் பல்வேறு படித்துறைகளில் உள்ள தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். அந்த ஆய்வின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 3-ந்தேதி தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் நீராடுவதால், மனிதக் கழிவுகள் அதிகம் கலந்துள்ளது. இதனால் கோலி பார்ம் (எப்.சி.) என்ற நுண்ணுயிரி அதிக அளவில் கலந்துள்ளது. இதனால் அந்த தண்ணீர் மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை. இது கவலைக்குரியது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமம் மற்றும் பிற படித்துறைகளில் அதிகமானோர் நீராடுவதால் மனிதக் கழிவுகள் கலப்பதால், கோலி பார்ம் பாக்டீரியாக்கள் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் திரிவேணி சங்கம தண்ணீர் மனிதர்கள் குளிப்பதற்கு தகுதியற்றதாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்கும்படி உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.