தேர்தல் பின்னடைவு: அவசர ஆலோசனை நடத்திய அஜித் பவார்...காரணம் என்ன?
|மராட்டிய மாநிலத்தில் அஜித் பவாரின் என்.சி.பி. கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டு 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
மும்பை,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் இந்திய கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க.வை பின்னுக்கு தள்ளியது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரஸ் 13 தொகுதிகளையும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளையும் , சரத் பவாரின் என்.சி.பி.எஸ்.பி. 8 தொகுதிகளையும், அஜித் பவாரின் என்.சி.பி. 1 தொகுதியையும் கைப்பற்றின.
இந்நிலையில், மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் தனது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தெற்கு மும்பையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லமான தியோகிரியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
என்.சி.பி. தலைவர் அஜித் பவார் தவிர, கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், அமைச்சர்கள் ஹசன் முஷ்ரிப், சகன் புஜ்பால், திலீப் வால்ஸ் பாட்டீல் மற்றும் தனஞ்சய் முண்டே ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பவாரின் என்.சி.பி. கட்சி மாநிலத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு, ராய்காட் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா, பாரமதி தொகுதியில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சரத் பவாரின் மகள் சுப்ரியாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் பா.ஜ.க. கூட்டணி தனித்து ஆட்சி அமைக்க முடியாததற்கு உத்தர பிரதேசம், மராட்டிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.