< Back
தேசிய செய்திகள்
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு விவகாரம்: ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை
தேசிய செய்திகள்

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு விவகாரம்: ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

தினத்தந்தி
|
21 Nov 2024 10:01 AM IST

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க டெல்லி கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு ஏற்றுக்கொண்டதற்கு எதிராக ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி மனோஜ்குமார் ஓரி விசாரித்தார்.

அப்போது ப.சிதம்பரத்தின் சார்பில் வக்கீல் என்.ஹரிஹரன் ஆஜராகி, 'மனுதாரர் முன்னாள் மத்திய மந்திரி என்பதால், முன் அனுமதி பெற வேண்டும். ஆனால் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அனுமதி இல்லாமலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது' என வாதிட்டார். இதற்கு அமலாக்கத் துறையின் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன் இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 22-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்