பெங்களூருவில் காற்று மாசு அதிகரிப்பு- மக்கள் கடும் அவதி
|வாட்டி வதைக்கும் கடும் குளிருக்கு மத்தியில் பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
பெங்களூரு,
இந்தியாவின் சிலிகான் வாலி என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூரு. ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள பெங்களூரு நகரில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேந்த டெக் வல்லுனர்கள் பணியாற்றிவருகிறார்கள். இதனால், நகரின் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மற்றொரு பக்கம், காற்று மாசு பிரச்சினையும் பெங்களூருவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
பெங்களூரு நகரில் தற்போது நகரில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், காற்று மாசும் அதிகரித்துள்ளதால் நகரவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.நகரில் நிலவும் குளிர் காலநிலையால் வாகனங்களின் புகை மற்றும் சாலையில் ஏற்படும் புழுதியால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இதனால் இருமல், தூசி ஒவ்வாமை போன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படுகிறது. இதனால், முககவசம் அணிந்து நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. காற்றின் தர குறியீடு (ஏ.கியூ.ஐ.) 100-க்குள் இருக்க வேண்டும். ஆனால் நகரின் பல பகுதிகளில் காற்றின் தர குறியீடு 100-க்கும் மேல் உள்ளது. இதனால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.